தேசிய கல்விக் கொள்கை வரமா ? சாபமா?

கடந்த வாரம் கொரோனா நிகழ்வையும் கடந்து நாடெங்கும் பேசப்பட்ட விஷயம் தேசிய கல்விக் கொள்கை

இஸ்ரோ முன்னாள் தலைவர் திரு. கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இந்த வரைவு அறிக்கையில்? சற்று சுருக்கமாக பார்க்கலாம்.

இதுவரை 10+2 என்றிருந்த தேர்வு முறை இனி 5+3+3+4 என்று மாற்றப்படும்.
அதாவது, 3 வயது முதல் பள்ளி சேர்க்கை தொடங்கும். , இரண்டாம் வகுப்பு வரை அடிப்படை கல்வி, 3-5 ஆயத்த கல்வி, 6-8 நடுநிலை கல்வி, 9-12 மேல்நிலை கல்வி.இப்படி விரிகிறது தேசிய கல்வி கொள்கை.

இத்தனை தேர்வுகள் இருந்தாலும் அது மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர மட்டுமே என்று இதில் கூறப்படுகிறது. 10, 12 ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

5ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி.
6ம் வகுப்பு முதல் படிப்புடன் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி.
பாட சுமை குறைப்பு.
பள்ளிகள் டிஜிட்டல் மயம் .
அனைத்து கல்லூரி படிப்பிற்கும் நுழைவுத்தேர்வு.
ஆசிரியர்களின் தகுதியை உயர்த்தும் வகையில் அவர்களுக்கும் தேர்வு,

இப்படி நல்ல அம்சங்கள் இதில் இருந்தாலும், பலரது எதிர்ப்பை சம்பாதித்த அம்சங்களும் இதில் உள்ளன.

பல நாடுகளில் 5 வயதிற்கு மேல் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கவேண்டும் என்று கூறப்படும் நிலையில் 3 வயது முதலே சேர்க்கை துவங்க வேண்டும்,.
6ம் வகுப்பு முதல் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலமாக குலவழி கல்வி மீண்டும் அமலாகுமோ என்ற அச்சம்,
இதனால் மாணவர்களின் படிப்பு இடையில் நிறுத்தப்படும்.

பலவித தேர்வுகளில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்,
அதனால் மாணவர் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் தரப்பில் வாதம்.

பள்ளி புத்தக விநியோகம் இனி மத்திய அரசிடம் செல்வதால், நம் பிள்ளைகளுக்கு நம் கலாச்சாரம், வரலாறு உள்ளிட்டவை மறைக்கப்படும் என்பது கல்வியாளர்களின் அச்சம்.

நாம் என்ன படிக்க வேண்டும் என்பதை மத்திய அரசே இனி முடிவு செய்யும் என்பது அவர்களின் வாதம் .
மும்மொழி கொள்கையில் 3வது மொழி மாணவர் விருப்பம் என்றபோதும், அதில் ஹிந்தி பின்னாளில் புகுத்தப்பட வாய்ப்பு,.

இந்த கல்வி கொள்கை அமலுக்கு வந்தால் ஒரே நாடு, ஒரே கல்வி என்பது வெளிப்படும். ஆனால் அது ஹிந்தி தவிர மற்ற மொழிகளின் அஸ்திவாரத்தை அசைத்து பார்த்துவிடும் என்ற கருத்தும் நிலவுவதால் இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு நிலவுகிறது.

நான் இங்கு பதிவிட்டது ஒரு சில அம்சங்கள் மட்டுமே. முழுவதும் பதிவிட இன்றைய பொழுது போதாது,

கல்வியாளர் மற்றும் அனைத்து தரப்பினரின் சந்தேகங்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.

மாநில அரசுகளின் உரிமைகளும், மாநில மொழிகளின் மேம்படுத்தலையும் தேசிய கல்வி கொள்கை பறிக்காது என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

இறுதியாக ஒன்று,

கல்வித்தரம் உயர வேண்டும். அதே நேரம் மொழிகளின் தொன்மையும் காக்கப்பட வேண்டும். அதற்கேற்றாற் போன்று கல்விக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

  • இது தெருவோரப்பித்தனின் கருத்து.