மானக் ஷா விற்கு சல்யூட்

 

 

நாள்: 1971ம் ஆண்டு, மார்ச் 25.
இடம்: கிழக்கு பாகிஸ்தான்.

எங்கு பார்த்தாலும் கலவரமும், பீதியும், பதட்டமும் தாண்டவமாடிய நேரம். என்னவாகப் போகிறோம் என்று புரியாமல் கிடைத்த பொருட்களை கையில் எடுத்துக் கொண்டு, குடும்பம் குடும்பமாக இந்தியாவை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது அப்பாவி மக்கள் கூட்டம்.

மேற்கு வங்கத்தின் வழியாகவும், கிழக்கு இந்திய மாநிலங்கள் வழியாகவும் ஆயிரக்கணக்கில் புகுந்த வங்காளிகளால் இந்தியா விழி பிதுங்கியது. மறுபக்கம் தப்ப முடியாமல் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி உயிரிழந்த வங்காளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி விட்டது.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்துக் கொண்டிருந்தது பாகிஸ்தான் ராணுவம்.

கிழக்கு பாகிஸ்தானில் நிலவிய அரசியல் ஸ்திரமின்மை, கலவரம், இனப் படுகொலையால் இந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரும் பதட்டம். அலை அலையாய் வந்துகொண்டிருக்கும் அகதிகளால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுமே என்ற அச்சம்.

கல்கத்தா விரைகிறார் பிரதமர் இந்திரா காந்தி. அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை. முடித்துக் கொண்டு டெல்லி வருகிறார். நேராக ராணுவ தலைமையிடத்திற்குச் செல்கிறார்.

ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் மானக் ஷாவிடம் கேட்கிறார். “இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்தால் என்ன செய்ய முடியும்?” அதற்கு இப்படி பதிலளிக்கிறார் மானக் ஷா, “ஒன்றும் செய்ய முடியாது”. தளபதியின் இந்த பதிலைக் கேட்டு இந்திராவுடன இருந்த மூத்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஒரு ராணுவத் தளபதி நாட்டின் ஆட்சித் தலைவரிடம் இப்படி பதிலளிப்பார் என்று யார்தான் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் முகத்தில் இருந்த கம்பீரம் மாறாமல், இந்தப் பதிலைத் தெரிவித்தார் மானக் ஷா.

அவர்களின் எண்ண ஓட்டத்தைக் கணித்த மானக் ஷா “நமது ராணுவம் தற்போது தயார் நிலையில் இல்லை. தாக்குதலுக்கு நாம் திட்டமிட்டால் அதற்கு கால அவகாசம் தேவை”

ஆனால் ‘போர்’ வேகத்தில் இருந்த இந்திராவோ, “கிழக்கு பாகிஸ்தானை நமது ராணுவம் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதற்குத் தேவையான திட்டங்களுடன் இன்னும் 2 நாட்களில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்து சேருங்கள்” என்று கூறி விட்டு கிளம்பிச் செல்கிறார்.

2 நாட்களில் அமைச்சரவையும் கூடியது. இந்திரா தலைமையில் கேபினட் அமைச்சர்கள் அனைவரும் மானக் ஷாவின் பதிலை அறிய காத்துள்ளனர். அப்போது இந்திரா, “உடனடியாக கிழக்கு பாகிஸ்தானுக்குள் நமது ராணுவம் நுழைய வேண்டும். அங்குள்ள பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடிக்க வேண்டும். அப்போதுதான் முஜிபுர் ரஹ்மான் ஆதரவு அரசை நம்மால் அங்கு நிறுவ முடியும். அகதிகளும் கிழக்கு பாகிஸ்தான் திரும்பிச் செல்ல முடியும். இது அவசரம்”.

இந்திராவின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மானக் ஷா, “கிழக்கு பாகிஸ்தானில் 90 ஆயிரம் பாகிஸ்தான் படையினர் உள்ளனர். இவர்களை சமாளிக்க நாம் இரு படைப் பிரிவுகளை அனுப்ப வேண்டும். ஒன்றை வங்காளத்திற்கும் (மேற்கு வங்காளம்), இன்னொன்றை வட கிழக்குப் பகுதிக்கும் அனுப்ப வேண்டும்.

இதற்கு குறைந்தது 2 மாதங்களாவது ஆகும். உடனடியாக அனுப்புவது சாத்தியமில்லாதது”.

இதைக் கேட்ட இந்திரா பதிலேதும் பேசாமல் மானக் ஷாவை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உடன் இருந்த அமைச்சர்களோ, ஒரு ராணுவத் தளபதி இப்படியா கூறுவது, தயார் நிலையில் படைகளை வைத்திருக்க வேண்டாமா என்று ஆவேசப்பட்டனர்.

அதை கண்டு கொள்ளாத மானக் ஷா, “எனது படையினர் ஜூன் மாதத்திற்குள் தயாராகி விட்டாலும் கூட, என்னால் உடனடியாக தாக்குதலை நடத்த உத்தரவிட முடியாது. அதற்கு இரு காரணங்கள்.

ஒன்று, அந்த சமயத்தில் பருவ மழை தீவிரமாக இருக்கும்.
மற்றொன்று, இமயமலைப் பகுதியில் பனி விலகியிருக்கும். அந்த நிலையில், வடக்கு எல்லையில் நிலை கொண்டுள்ள படையினரை கிழக்கு பாகிஸ்தான் நோக்கி வரவழைப்பது கடினமாக இருக்கும். அப்படி வந்தால் பாகிஸ்தான் ராணுவம் நம்மைத் தாக்கும்.

எல்லைப் பகுதிகளில் ஒரே நேரத்தில் நாம் இரு மோதல்களை சந்திக்க முடியாது. மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படாது என்ற உறுதிமொழியை அவர்களிடமிருந்து நம்மால் உறுதியாகப் பெற முடியாது. எனவே மழை நிற்க வேண்டும், இமயமலைப் பகுதியில் பாதைகள் அடைபட வேண்டும். அப்போதுதான் நம்மால் ஏதாவது செய்ய முடியும்” என்றார்.

மானக் ஷாவின் பதிலால் அமைச்சர்கள் மறுபடியும் கோபப்பட்டனர். ஆனால் இந்திராவின் முகத்தில் அர்த்தம் பொதிந்த மெளனம். இருப்பினும் மெளனத்தைக் கலைத்த இந்திரா, “படைகளை தயார் படுத்துங்கள். சொல்லும்போது தாக்கலாம். அனேகமாக அது ஜூன் மாதமாகவும் இருக்கலாம்” என்று மானக் ஷாவுக்கு உத்தரவிட்டார். அவரும் வேறு வழியில்லாமல் சரி என்றார்.

அதன் பின்னர் மானக் ஷாவுக்கு எதிராகவும், நமது ராணுவத்தின் தயார் நிலை குறித்தும் ஏகப்பட்ட கேலிப் பேச்சுக்கள், ஏளனங்கள், விமர்சனங்கள்.
பேசாமல் எல்லைப் பாதுகாப்புப் படையை அனுப்பி பாகிஸ்தானை விரட்டியிருக்கலாமே என்றும் நக்கல்கள். மானக் ஷாவுக்கு தைரியம் கொஞ்சம் குறைச்சல்தான் என்றும் ஏளனங்கள்.

எல்லாம் மானக் ஷாவின் காதுகளையும் எட்டின. அவரோ அமைதி காத்தார். அதேசமயம், கிழக்குப் பிராந்திய படையினருக்கு உங்களால் எந்த வகையில் தயாராக முடியுமோ, அந்த ரீதியில் ரெடியாகுங்கள். உங்களுக்கு தோன்றுகிற திட்டங்களை செயல்படுத்துங்கள் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.

மறுபக்கம் கிழக்கு பாகிஸ்தானைச் சுற்றிலும், தகவல் தொடர்பு வசதிகளை வலுப்படுத்தினார். நிர்வாக அலுவலகங்களை நிர்மானிக்க உத்தரவிட்டார். இந்தத் தாமதம், இன்னொரு நல்ல விஷயத்திற்கும் வித்திட்டது. அது, கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், அரசுக்கும் எதிராக செயல்பட்டு வந்த முக்தி வாஹினி கொரில்லா படையினர் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள அது வசதியாக இருந்தது.

இதுதவிர, இந்தியாவிலிரு்நதபடி சுதந்திர வங்கதேச அரசு உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையிலான உறவு வலுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்பாமல் தடுக்கப்பட்டது.

இப்படி பல முனைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் நமது ராணுவத்தையும் மானக் ஷா பக்காவாக தயார்படுத்தி வைத்திருந்தார்.

எல்லாம் முடிந்த நிலையில் டிசம்பர் 3ம் தேதி இந்தியா மீது பாகிஸ்தான் விமானப்படை சொல்லாமல் கொள்ளாமல் தாக்கியது. தொடங்கியது இந்தியா- பாகிஸ்தான் போர்.

பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போர், மானக் ஷாவின் சாமர்த்தியத்தாலும், புத்திசாலித்தனமான நடவடிக்கையாலும் 15 நாட்களில் முடிவுக்கு வந்தது.

கிழக்கு பாகிஸ்தானைச் சுற்றிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நமது படைகள், அப்படியே உள்ளே புக, தப்ப முடியாமல் ஸ்தம்பித்து நின்றன பாகிஸ்தான் படைகள். 90 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். புதிதாகப் பிறந்தது வங்கதேசம்.

இந்த இடத்தில் நமக்கு நினைவுக்கு வருபவர் ரஷ்ய ராணுவ தளபதி மார்ஷல் குதுஸோ. குதுஸோவுக்கும், மானக் ஷாவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

நாட்டின் பிரதமரே படையெடுக்க உத்தரவிட்டும் அதை உறுதியாக மறுத்தவர் மானக் ஷா. அதேபோலத்தான், மார்ஷல் குதுஸோவும், நெப்போலியனிடமிருந்து மாஸ்கோவை காக்க ஜார் மன்னன் உத்தரவிட்டும் அதை ஏற்க மறுத்தார். இருவரும் அதற்கு தெரிவித்த காரணம் ஒன்றுதான் -படைகளுக்கு ஏற்ற சாதகமான நிலை இல்லாதது.

1812ம் ஆண்டில் ரஷ்ய படையின் தளபதியாக இருந்தவர்தான் குதுஸோ. அப்போது மாஸ்கோ மீது நெப்போலியன் படையெடுத்த போது அதை தடுக்க குதுஸோவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்தார் குதுஸோ. அப்படிச் செய்தால் ரஷ்ய படைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று கூறி மறுத்து விட்டார்.

அதேபோல, உகந்த நேரமாக இல்லாததால் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தால் இந்தியப் படைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கி இந்திராவின் உத்தரவை ஏற்க மறுத்தார் மானக் ஷா.

தனது செயலால் ரஷ்ய ராணுவத்தை காப்பாற்றினார் குதுஸோ. அதேசமயம், சரியான நேரத்தில் படையெடுத்து மாஸ்கோவையும், ரஷ்யாவையும் மீட்டவர் அவர். அதேபோலத்தான் முதலில் மறுத்தவர் மானக் ஷா. ஆனால் சரியான நேரம் வந்தபோது, கிழக்கு பாகிஸ்தானை சுற்றி வளைத்து பாகிஸ்தான் படையினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இந்தியாவின் ராணுவப் பெருமையை உலகுக்கு பறை சாற்றினார். சுதந்திர வங்கதேசம் உருவாக உதவினார்.

இந்த இரு தளபதிகளையும், அரசுகளின் நெருக்கடிகள் எதுவும் செய்யவில்லை. உண்மை நிலையை உணர்த்தி உகந்த நேரத்தில் தத்தமது நாட்டின் கெளரவத்தை காப்பாற்றியவர்கள் இருவரும். அதேசமயம், வாய்ப்பு கிடைத்தபோது வெற்றிக் கனியை தட்டிப் பறித்தவர்கள்.

இந்திராவின் முதல் கட்டளையை ஏற்க மறுத்த மானக் ஷா, பின்னர் வாய்ப்பு வந்தபோது, 15 நாட்களில் காரியத்தை முடித்து இந்திராவை குளிர்வித்தார். எதிர்ப்பாளர்களின் வாயையும் கட்டிப் போட்டார்.

இந்திய ராணுவத்தின் மிக உயரிய வெற்றி எது என்றால் அது நிச்சயம் 71 போர்தான். அந்த வெற்றியின் நாயகன் மானக் ஷா. இந்திய ராணுவத்தினரால் சாம் பகதூர் என செல்லமாக அழைக்கப்பட்ட மானக் ஷா,  மறைந்து விட்டார். ஆனால் அவரது முத்திரை அவ்வளவு சீக்கிரம் மறையாது.

சாம் பகதூருக்கு ஒரு ராயல் சல்யூட்!

நன்றி – தட்ஸ் தமிழ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: