பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுப்பட்டு வரும் தீவிரவாதிகளை, எல்லை கடந்து வேரறுக்கும் துருப்புகளை அனுப்ப தயங்க மாட்டேன் என ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து கொண்டு அவ்வவ்போது எல்லைத்தாண்டி வந்து ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் கூட்டுப்படையினரை கொல்ல தீவிவாதிகள் முயற்சிக்கும் போது, தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் முழு உரிமை தங்களுடைய நாட்டிற்கு உண்டு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிபர் மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றும் போது, தாலிபான்களுக்கு ஆதரவான பழங்குடியின தலைவர் பய்துல்லா மெஹ்சுத் பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
சனிக்கிழமையன்று கந்தஹார் மாகாணத்தில் இருக்கும் சிறை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்புவதற்கு காரணமாக இருந்தார்கள் தாலிபான்கள்.
தாலிபான்கள் அல்லது வேறு எந்த தீவிரவாதிகளுக்கு தாங்கள் புகலிடம் கொடுப்பதில்லை என பாகிஸ்தான் நீண்டகாலமாகவே சொல்லி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயோ நீண்டகாலமாகவே, பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளை கூண்டோடு காலி செய்யுங்கள் என பாகிஸ்தானையும், சர்வதேச படையினரையும் கேட்டு வருகிறார். ஆனால் அவர் ஒரு போதும் எல்லை தாண்டி படைகளை அனுப்ப போவதாக அச்சுறுத்தல் விடுத்ததில்லை.
