பீஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய டென்னிஸ் அணியான லியாண்டர் பயஸ் – மகேஷ் பூபதி இணையில் மாற்றமில்லை என்று அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
லியாண்டர் பயஸுக்கு பதிலாக போபண்ணாவுடன் இணைந்து விளையாடவே தாம் விரும்புவதாக, டென்னிஸ் கூட்டமைப்புக்கு மகேஷ் பூபதி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், பயஸுடன் தனக்கு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது என்றும், அவருடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என்று மகேஷ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அவ்விருவரின் பெயர்களும் ஏற்கெனவே பிப்ரவரி 28-ல் பரிந்துரைக்கப்பட்டு விட்டதாகவும், அதில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ள முடியாது எனவும் அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் செயலர் அனில் கண்ணா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்திநிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “டேவிஸ் கோப்பையை விட ஒலிம்பிக் பெரியது. சிறந்த வீரர்கள் மட்டுமே அதில் பங்கேற்க முடியும். இந்தியாவைப் பொருத்தவரை, இவ்விருவரும் (பயஸ் – பூபதி) சிறந்தவர்கள். அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது” என்றார்.
மேலும், “மகேஷ் பூபதி தேச நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இருவரும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
