கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்காக மூன்று நாட்களை தேசிய துக்கதினங்களாக சீனா அறிவித்துள்ளது.
சிச்சுவான் பிரதேசத்தில் பூகம்பம் நடந்து சரியாக ஒரு வாரம் முடியும் நிலையில் மூன்று நிமிட மௌன அஞ்சலியுடன் இந்த துக்கதினங்கள் ஆரம்பமாகும்.
ஓலிம்பிக் ஜோதியின் வலமும் திங்கள் முதல் மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகின்றது.
இறந்தவர்களுடைய தொகை அறிந்தளவுக்கு இது வரை முப்பத்திரண்டாயிரத்தையும் தாண்டிவிட்டது என்றும் காயமடைந்தவர் தொகை இரண்டு லட்சத்து இருபதாயிரம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஹு ஜின்டாவ் அவர்கள் சர்வதேச மீட்பு உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உதவிப் பொருட்களுடன் வரும் முதலாவது அமெரிக்க விமானப்படை விமானம் சீனாவில் வந்திறங்கியுள்ளது. ஆனால் பூகம்பம் நடந்த பகுதிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய மீட்புக் குழுவொன்று நாடு திரும்பியுள்ளது.
அவ்வப்போது உயிருடன் சிலரை மீட்புப் பணியாளர்கள் இன்னமும் மீட்டுக் கொண்டிருக்கின்றனர். மழையும் தொடருகின்ற பூகம்பப் பின்னதிர்வுகளும் அவர்களின் முயற்சிகளைப் பாதித்துக் கொண்டிருக்கின்றன.
