திராவிட் சர்ச்சை?

இந்தியன் பிரீமியர் லீக் – பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ஆட்டக்காரர்கள் தேர்வில், ராகுல் திராவிட்டையும், சாரு ஷர்மாவையும் நம்பியது பெரும் தவறாகிவிட்டது என்று அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா கூறினார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 33 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

பெங்களூர் அணியின் கடும் பின்னடைவு குறித்து பெங்களூரில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த மல்லையா, கிரிக்கெட்டில் தனக்கு போதிய அனுபவம் இல்லாததால், அணித் தேர்வில் தலையிடவில்லை என்றும், கேப்டன் ராகுல் திராவிட்டும், தலைமை நிர்வாகி சாரு சர்மாவும்தான் முடிவுகளை மேற்கொண்டனர் என்றும் தெரிவித்தார்.

திராவிட்டையும், சாருவையும் நம்பியது மாபெரும் தவறாகிவிட்டது என்று குறிப்பிட்ட அவர், அணியின் இறுதிப் பட்டியலைப் பார்த்துவிட்டு, ‘டெஸ்ட் அணி போன்று உள்ளதே’ என்று தனது நண்பர்கள் கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் அணியை தேர்வு செய்த இருவரின் மீதும் தாம் நம்பிக்கைக் கொண்டிருந்தாகவும் கூறினார்.

மேலும், எஞ்சிய ஆட்டங்களிலாவது திராவிட் வெற்றியை ஈட்டித் தருவார் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில், பெங்களூர் அணியின் நிலை மோசமாகி வந்ததன் எதிரொலியாக, அதன் தலைமை நிர்வாகி சாரு ஷர்மாவுக்குப் பதிலாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பிரிஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார்.

பெங்களூர் அணியை 111.6 மில்லியன் டாலர்கள் கொடுத்து, விஜய் மல்லையா ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி – வெப்துனியா

மறுமொழியொன்றை வழங்குக