மோதல் மீண்டும் ஆரம்பம்

                

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இதில் விலைவாசி குறித்து பிரச்சனை கிளப்ப பாஜக, இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.

பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கியது. நீண்ட நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்ட கூட்டத் தொடர் முடிந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து இரண்டாவது கட்ட கூட்டம் நாளை தொடங்குகிறது.

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் பணவீக்கத்தின் அளவு 7.41 சதவீதமாக அதிகரித்து கோதுமை, அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டதையடுத்து இது குறி்த்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்ப பாஜகவும் இடதுசாரிகளும் திட்டமிட்டுள்ளன.

இது குறித்து மக்களவை பாஜக துணைத்தலைவர் விஜய்குமார் மல்கோத்ரா கூறுகையில், விலைவாசி தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக ஒத்திவைப்பு தீர்மானத்தை பாஜக கொடுத்துள்ளது. அவ்வாறு சிறப்பு விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டால், நாடாளுமன்றத்தை செயல்பட விடமாட்டோம் என்றார்.

அதே போல சமாஜ்வாடி கட்சியும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளது.

இடதுசாரிகள் நோட்டீஸ்:

மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவைத் துணைத் தலைவர் முகம்மத் சாலிம் கூறுகையில், விலைவாசி குறித்து ஏற்கனவே ஒரு கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறோம் என்றார்.

அதே போல இடதுசாரி தலைவர்களான குருதாஸ் தாஸ்குப்தா, பாசுதேவ் ஆச்சார்யா உள்ளிட்டோரும் விலைவாசி குறித்து விவாதிக்க நோட்டீஸ்கள் கொடுத்துள்ளனர்.

இதனால் விலைவாசி உயர்வு பிரச்சனையை வைத்து எதிர்க் கட்சிகள் அனைத்து மத்திய அரசுக்கு பெரும் தலைவலி கொடுக்கவுள்ளன.

27% இட ஒதுக்கீடு:

இந் நிலையில் பிற்படுத்தபட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயரை சேர்க்க கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது தொடர்பான பிரச்சனையைக் கிளப்ப திமுக, பாமக, ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகியவை கிளப்பவுள்ளன.

இதனால் கூட்டத் தொடர் பெரும் பரபரப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.

நன்றி – தட்ஸ்தமிழ்

மறுமொழியொன்றை வழங்குக