ஆறாவது சம்பள கமிஷன் குழு அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஆறாவது சம்பள கமிஷன் கடந்த 2006ம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இந்த குழு தனது கருத்தை கேட்டறிந்து அறிக்கை தயார்செய்தது. இந்த குழு தனது அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திடம் இன்று தாக்கல் செய்தது.
அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை 40 சதவீதம் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுளளது. மேலும் வீட்டு வாடகைப்படி 30 சதவீதம் உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு ஜனவரி மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு முன்தேதியிட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கமிஷனின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். பட்ஜெட்டில் ஊழியர்களுக்கான சலுகைகள், ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் சம்பள கமிஷனின் இந்த அறிக்கை அமல்படுத்தப்பட்டால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். இது குறித்து சம்பள கமிஷன் தலைவர் பி.என். ஸ்ரீகிருஷ்ணாவிடம் கேட்டதற்கு, நாட்டு நலனை பாதுகாக்கும் வகையில் அறிக்கை தயார் செய்து அளித்துள்ளதாக கூறினார்.
நன்றி – தினமலர்