அ.தி.மு.க.,விலிருந்து சில தினங்களுக்கு முன்பு விலகிய வக்கீல் ஜோதி, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா மற்றும் கட்சியினரின் வழக்குகளில் வாதாடி வந்த வக்கீல் ஜோதி, கடந்த 13ம் தேதி அ.தி.மு.க.,விலிருந்து விலகுவதாக பொதுச்செயலர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதினார். மேலும் வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் அனுப்பினார். நேற்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.இதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் கருணாநிதி, `தி.மு.க., ஆட்சியில் தமிழகம் இருண்டு கிடப்பதாக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறிவந்தார். இருண்ட தமிழகத்தை ஒளிபெறச் செய்வதற்காக ஜோதியை அனுப்பியிருக்கிறார். வக்கீல் ஜோதி தி.மு.க.,வில் சேர்ந்து, கட்சி உறுப்பினராகியிருக்கிறார்.
ஜோதிக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படுகிறது என பொறுத்திருந்து பாருங்கள். ஜெயலலிதாவிடம் அதிகம் பிடித்தது தன்னம்பிக்கை; அவரது பலவீனம், அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை என்று நான் முன்பு கூறியதில், எந்த மாற்றமும் இல்லை’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த வக்கீல் ஜோதி கூறியதாவது:
தி.மு.க.,விற்கு நான் ஒரு நல்லது கூட செய்ததில்லை. எனது மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் மூலமாக தி.மு.க.,வில் சேர்ந்திருக்கிறேன். ஜெயலலிதா தொடர்பான வழக்கில், அவருக்கு எதிராக வாதாட மாட்டேன். அ.தி.மு.க.,வில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட, பொறுப்பில் உள்ள பலர் கொதித்து போய் உள்ளனர். நடந்த சம்பவங்களுக்கு முழுக் காரணம் சசிகலா தான். அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவிற்கே பாதுகாப்பு இல்லை. இவ்வாறு வக்கீல் ஜோதி கூறினார்.
நன்றி – தினமலர்
